Wednesday, 27 February 2013

மனிதனோடு யானைகளின் போராட்டம் !


             நம்முடைய வீட்டின் ஒரு பகுதியை எவரேனும் ஆக்கிரமித்தால் நமக்கு வரும் கோபத்துக்கு அளவே இருக்காது. ஆக்கிரமித்தவருடன் சண்டை, நீதிமன்ற வழக்கு வரை நாம் சென்று விடுவோம். அதேபோன்றதொரு பிரச்னையைத்தான் உலகின் அறிவுவாய்ந்த விலங்கினமாக கருதப்படும் யானைகள் இப்போது இந்தியக் காடுகளில் அனுபவித்து வருகின்றன.
 யானைகள் தங்களுடைய இருப்பிடத்தைத் தக்கவைப்பதற்கும், வாழ்வதற்கும் மனித இனத்துடன் போராடிக்கொண்டிருக்கின்றன.
              மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் காலம் காலமாக யானைகள் தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. ஆனால், மனிதன் காடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியவுடன் யானைகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தன. அவை தன்னுடைய இரையைத் தேடியும், நீரின் ஆதாரங்களைத் தேடியும் மனிதன் வாழும் இடத்துக்கு வரத்தொடங்கி ஏராளமான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன.
              இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில் மனிதனுக்கும், யானைகளுக்கும் இழப்புகள் அதிகரித்துகொண்டே செல்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களான தேனி, கம்பம், வால்பாறை, ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்ததாக செய்திகள் அடிபடும். அவ்வாறு புகும் யானைகளை வனத்துறையினரின் உதவியுடன் கிராம மக்கள் விரட்டி அடிப்பர். ஆனால் யானைகள் வந்த இடம் ஒரு காலத்தில் அவைகள் பயணப்பட்ட வழித்தடமாக இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. அவற்றின் இடத்தைத்தான் நாம் ஆக்கிரமித்துள்ளோம் என்பது மனிதன் மறக்க மறுக்கும் உண்மை.
              யானைகளின் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்துள்ளதால் தான் இந்தப் பிரச்னை எழுகிறது எனத் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
              இந்தியாவில் 32 ஆயிரத்து 900 யானைகள் உள்ளதாக 2011-ம் ஆண்டு பதிவான யானைகள் கணக்கெடுப்பு கூறுகிறது. அதில் அதிகபட்சமாக தென் இந்தியாவில் 17,000 யானைகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 6,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக இன்னும் வெளிவராத கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
              இதேபோல் ஆப்பிரிக்காவில் யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விலங்குகள் நல அமைப்பு அண்மையில் எச்சரித்தது. இந்திய யானையைவிட ஆப்பிரிக்க யானைகள் பலம் வாய்ந்தவை. இப்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டன. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.
 தமிழகத்தில் நீலகிரி, முதுமலை, ஏற்காடு போன்ற பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகளும் சொகுசு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.
              இதனால் யானைகள் அந்த வழியாகச் செல்ல முடியாமல் கிராமங்கள், வயல்கள் வழியாகச் செல்கின்றன. இதனால் உயிர்ப்பலி, பயிர் நாசம் நடக்கிறது. இதையடுத்து, அழிந்துபோன யானைகள் வழித்தடத்தைக் கண்டறியுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
              7,360 ஏக்கர் பரப்பளவைக் கண்டறிந்து அதை யானைகள் வழித்தடம் என தமிழக அரசு அறிவித்தது. இந்தப் பகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. அவற்றை காலி செய்ய மறுத்து அந்தப் பகுதியில் உள்ள சொகுசு வீட்டு உரிமையாளர்களும் மக்களும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
 அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநில அரசு, தனது மாநிலத்தில் வசிக்கும் மக்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பராமரிக்க வேண்டும். எனவே, யானைகளின் வழித்தடங்களில் உள்ள பகுதியில் உள்ள சொகுசு விடுதி உரிமையாளர்களும் பாரம்பரியமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் 3 மாதத்துக்குள் இடத்தைக் காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசு மிகச் சிறந்த மாற்றிடம் அல்லது நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
              ஆனால், இவற்றையெல்லாம் மனிதர்கள் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாமோ நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி "அலர்ட் இண்டிகேட்டர்' எனும் கருவியை யானைகளின் வழித்தடத்தில் பொருத்தி யானைகளின் நடமாட்டத்தைத் தெரிந்து கொள்கிறோம்.
              இதனால் யானைகளின் தாக்குதலில் இருந்து மனிதனைக் காப்பாற்றி விடுகிறோம், யானைகளை விட்டுவிடுகிறோம். இதேபோன்ற நிலை தொடர்ந்தால் ஆப்பிரிக்க யானைகளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்திய யானைகளுக்கு ஏற்படும். காடுகள் மற்றும் விலங்குகள் குறித்தும் மனிதன் எப்போதுமே சிந்தித்தது கிடையாது, சுயநலமாகவே சிந்திக்க பழகிவிட்டான். ஆனால், ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதே உண்மை. பெருகி வரும் மக்கள்தொகை காரணமாகவும் மனிதனின் பேராசை காரணமாகவும் காடுகள் பெரிதும் சுருங்கிவிட்டன.
              நாட்டில் மனிதன் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோன்ற உரிமைகள் காட்டில் வாழும் யானைகளுக்கும் இருக்கின்றன. வாழ்வதற்கு மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை உரிமைகளும் விலங்குகளுக்கும் இருக்கின்றன. எனவே, உரிமைகள் எங்கெல்லாம் பறிக்கப்படுகின்றதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும். இப்போது அப்படிப்பட்ட புரட்சியைத்தான் யானைகள் செய்துகொண்டிருக்கின்றன.

 நன்றி
 தினமணி 20 April 2012
ஆர்.ஜி. ஜெகதீஷ்



முன்னேற வேண்டுமா! ! !! !!!


எடுக்கும் வேலையில்,முழுஈடுபாடு,மனேதைரியம்,விடமுயற்சி, கிடைக்கும் உதவியோடு,எதிர்பார்க்கும் பல்வேறு உதவிகள், கிடைக்கப்பெற்று! போட்டிபொறமைகளின் உள் பயம் நீங்கி, துணியுடன்,அறிவாற்றலோடு, முழுத்திறனையும் வெளிப்படுத்தி,வருமானம் செழித்து முன்னேற வேண்டுகிறேன்.

Sunday, 24 February 2013

விவசாயத்தின் எதிர்காலம்

                           விவசாய எதிர்காலத்தின் மீது அக்கறையும் ஆசையும் கொண்டு, கடந்த காலத்தை திரும்பி பார்த்து, நிகழகாலத் தேவையாய் நான் உணரந்ததை எழுதுகிறேன். இதுதான் சரி என்று வாதிடவில்லை. விவசாயம் பற்றி நிறைய அறிந்தவர்களும் அனுபவம் உள்ளவர்களும் பலர் இருக்கின்றனர். எனது கட்டுரையின் எழுத்துக்களை, அதன் உண்மைகளை நீ்ங்கள் அராய்ந்து பார்க்கவேண்டும். எப்படிபட்ட கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

இன்றைய விவசாயம்.
                          
இன்றைய சூழலில் விவசாயம் என்றாலே இராசயன உரம், வீரிய ஒட்டுவிதை, பூச்சி கொள்ளி, களைக்கொள்ளி என்ற வேளாண்முறையை தான் நினைவுகூற வேண்டியுள்ளது. நமது வேளாண்முறையை மாற்றி அமைத்த பசுமை புரட்சியையும் அது சார்ந்த மாற்றங்களையும் உற்றுநோக்கும் போது அது தந்த பலன்களை விட பாதிப்புகளே பெரிதாக தெரிகிறது. பசுமை புரட்சியினால் வேளாண் முறையில ஏற்பட்ட மாற்றம் விவசாயத்தின் வளர்ச்சியா?. என்று கணக்கிட்டு பார்த்தால் அது நிலைத்த நீடித்த வளர்ச்சியாக இல்லை என்பதும், இன்றைய விவசாயத்தின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் உணர முடியும்.
விவசாயப் பாரம்பரியம்.
                           
நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது, நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வந்தவர்கள். அறிஞர்களும் அறிவியலார்களும் நம் நாட்டில் நிறையவே இருந்தனர், அதற்கு போதுமான அளவு சான்றுகளும் இருக்கின்றன. விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்து வரும் விவசாயிகளுக்கு நாம் விவசாயம் பற்றிய பாடம் கற்றுதர நேர்ந்தது மிகவும் வருத்திற்குரியது.

இந்தியர்களின் வாழ்வு நிலை.
                          
நம் நாட்டின் பண்பாடாய் மாறிப்போன மனித ஏற்ற-தாழ்வுகளும், சாதி வேறுபடுகளும் இந்தியாவின் பெரும்பாலான மக்களை பாமரர் ஆகவே வைத்திருந்தது. அதன் காரணமாக நம்மால் அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகளும், அரிய கண்டுபிடிப்புகளும் பாமரர்களுக்கு விளங்காது, விளக்க இயலாது என்று தவறாக நம்பிய நம் அறிஞர்கள் அதை சாஸ்திரம், சம்பிரதாயம், நம்பிக்கை என்கிற பெயரில் பாமரர்களிடம் புகுத்தினர். விளைவு உண்மைகள் அர்த்தமிழந்து போயின.
வௌ்ளையர்களிடம் அடிமைபட்டு போன பிறகு பாமரர்கள் சிந்திக்க முடியாமல் உழைக்க நேர்ந்தது, சுதந்திரத்திற்கு பின்னாவது அவர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டார்கள். பொதுநல அக்கறை உள்ள சிந்தனையாளர்கள் பலர் போராட்ட வடிவில் பாமரர்களை காப்பாற்றவும் அவரகளது வாழ்வை உயர்த்தவும் போராடி வந்தனர். இன்னும் போராடி வருகின்றனர். அரசியல் என்ற ஆயுதத்தை கையால தெரிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக கையாண்டதில் பல மாற்றங்களை இந்தியநாடும் மக்களும் எதிர்கொண்டனர். அதில் விவசாயமும் பெரும் மாற்றத்தை சந்தித்தது.
வஞ்சக வரலாறு.
                           1960
ல் பசுமை புரட்சி கொள்கை கொண்டுவரபட்டதாகவும். 1990ல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற கொள்கை முன்மொழிய பட்டதாகவும். வரலாற்றின் குறிப்பு சொல்கிறது. பசுமை புரட்சி ஏற்பட்டதிற்கு அன்றைய உணவு பற்றாக்குறை என்பதை தாண்டிய பல அரசியல் உள்நோக்கமும், ஆதாயமும் இருந்ததாக சில வரலாற்று கட்டுரைகள் விளக்குகின்றன.
வெறும் உள்நாட்டு அரசியல் அல்ல உலக அரசியல் அதற்கு பின்னால் செயல்பட்டதாக கட்டுரை விளக்குகின்றது. 1990களில் ஏற்பட்ட தாராளமயமாதல், உலகமயமாதல் கொள்கைகளிலும் உலக அரசியலின் பங்கு இருப்பதாகவும், சுயநல சிந்தனையாளர்களின் வஞ்சகம் மறைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்றளவும் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள் பற்றிய பல சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளன.
அரசின் கொள்கைகள்.
                          
பசுமை புரட்சியனால் ஏற்பட்ட இரசாயன விவசாய முறை கொஞ்சம் வளர்ச்சியடைவது போல் இருந்தாலும் பின்னர் வந்த பல அரசின் கொள்கைகளால் முதன்மை துறையான விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இரண்டாம் துறையான உற்பத்தி துறை முக்கியத்துவம் பெற்றது, பின்னர் மூன்றாம் துறையான சேவைத்துறை முக்கியத்துவம் பெற்று விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
பசுமை புரட்சியின் கோர முகம்.
                           
பசுமை புரட்சியின் கோர முகம் காலப்போக்கில் வெளிப்பட ஆரம்பித்தது. ஆரோக்கியமான விளையாட்டு வீரனுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவான் என்று நம்பிய பயிற்சியாளர், ஊக்கமருந்தை கொடுக்க உண்மையரியாத வீரனும் உட்கொண்டான். ஆரம்பத்தில் நன்றாகவே விளையாடினான். ஆனால் காலப்போக்கில் அவன் உடல்நலம் குன்றி பாதிக்கபட்டானாம். அதுபோல் தான் இந்திய விவசாயமும், பசுமை புரட்சியில் வேளாண் விஞ்ஞானி என்ற பயிற்சியாளர் ஊக்க மருந்து என்கிற பெயரில் இரசாயன உரம், வீரய ஒட்டுரக விதை, பூச்சிகொள்ளி, களைக்கொள்ளிகளை கொடுத்தனர்.
                           உண்மையறியாத விவசாயி தன் வளமான நிலத்தில் அவற்றை இட்டான். ஆரம்பத்தில் விளைச்சல் நன்றாகவே இருந்தது. நாளடைவில் அது மண்னை மலடாக்கிவிட்டது. மேலும் பலவகையான நோய்கள், பூச்சி தாக்குதல் என்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதை உணராத விவசாயி இன்னும் அதையே நம்புகிறான்.
                          
அதே சமயம் உண்மையறிந்த பயிற்சியாளனை போல அரசாங்கம் ஊக்க மருந்தையே விவசாயிடம் திணித்து வருகிறது. காரணம் கேட்டால் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், நவீன முறை வேளான்மை என்று ஏதோ சொல்கின்றனர். ஊக்கமருந்தால் பாதிக்கப்பட்டவன் ஒருவனாக இருக்கலாம் ஆனால் இரசாயன முறை விவசாயத்தால் பாதிக்கபட்டது விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும்தான்.

தற்சார்பை இழந்த விவசாயம்.
                          
விதை, உரம், உற்பத்தி முறை என்று எல்ல விதங்களிலும் தற்சார்பு கொண்டிருந்த விவசாயத்தை பசுமை புரட்சி என்ற பெயரால் விதை, உரம், களைக்கொள்ளி, பூச்சிகொள்ளி என்ற விவசாய இடுபொருட்களின் உற்பத்தி அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தோம். முதலீடு இல்லாமல் உற்பத்தி செய்து வந்த விவசாயி இடுபொருட்களுக்கு செலவு செய்தான். தற்சார்பாய் இருந்தவனை, பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க செய்தது அரசின் கொள்கை.
                          
உற்பத்தி செலவு அதிகரித்தது. உற்பததிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயி நஷ்டம் அடைந்தான். கடன் பட்டான். இன்று செய்தி தாள்களில் வரும் விவசாயிகளின் தற்கொலை செய்திகள் விவசாயித்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.

பாதிக்கபட்ட குடிமக்கள்.
                          
விவசாயிகள் இப்படியிருக்க இரசாயன முறை வேளாண்மையில் விளைந்த விவசாய உற்பத்தியை உட்கொள்ளும் ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கபடுகிறான். விவசாயத்தில் பயன்படுத்தும் இரசாயனங்கள் மண்ணை கெடுப்பதோடு நின்றுவடுவதில்லை, உற்பத்தியாகும் பொருட்களில் எங்சியுள்ள விஷத்தன்மை மனிதனுக்கு பல உடல் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. காற்றையும் தண்ணீரையும் மாசுபடுத்துகின்றன. என்டோசல்பான் என்ற பூச்சிகொள்ளியின் பாதிப்பை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அரசாங்கத்தின் அணுகுமுறை.
அரசாங்கம் விவசாயத்தின் மீது கவனம் செலுத்துவதேயில்லை. நாட்டின் மொத்த உற்பத்தியில்(GDP) விவசாயத்தின் பங்கு குறைவாக இருக்கிறது (அதற்கும் அரசின் கொள்கை தான் காரணம்) என்று கூறி பஜ்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கபடும் நிதியை குறைத்து கொண்டே போகிறது. இங்கே நான் படித்த ஒரு செய்தியை பகிர்கிறேன். தொழல்நுட்பங்களில் சிற்ந்த வல்லரசான அமெரிக்க நாடு கொண்டிருக்கும் விவசாய மானியக் கொள்கை பற்றய செய்தி, “இந்த ஆண்டு நாட்டில் குறிப்பிட்ட உற்பத்தி பொருளின் தேவை குறைவாக இருக்கும் என்பதால், அந்த பொருளை உற்பத்தி செய்யாமல் இருக்க அந்த உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது”. விவசாயத்தை முதன்மை துறை என கொண்டுள்ள இந்திய நாட்டில் அரசின் நிலைப்பாடு பற்றி நமக்கு தெரியாமல் இல்லை.

சமூக மாற்றம்.
                          
மாறிவந்த சமூக மாற்றமும் விவசாயத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
                           1.
இந்த காலகட்டத்தில் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் ஆகியன மாறத்தொடங்கின. ஒவ்வொருவரும் வசதியான சொகுசான வாழ்க்கை என்று கருதப்படும் வாழ்க்கையை வாழ ஆசைபட்டனர். பெரிய அளவில் விவசாயம் செய்தவர்கள் கூட உற்பத்தி மற்றும் சேவை துறையில் முதலீடு செய்தனர். தங்களை வளப்படுத்தி கொள்ள முற்பட்டனர். நாளடைவில் கல்வியறிவு வளர்ந்து வந்தது. விவசாயம் லபகரமான தொழிலாக இல்லை. பணம் சம்பாதிப்பது. பெரிய வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது என சொகுசான வாழக்கை பற்றிய கனவு மக்களிடையே வளர்ந்தது. பிள்ளைகளை தங்கள் கனவினூடே வளர்த்தனர். வளர்த்து வருகின்றனர். படித்து முடித்ததும் தொழில்துறைகளை தேடி ஓடி தன்னை வளப்படுத்த முயற்சிக்கிறான். வளர்ந்து விட்ட நுகர்வு கலாச்சாரத்தால் எவ்வளவு ஈட்டினாலும் போதுவதில்லை.
                           2.
வெறும் வியாபாரம் ஆகிபபோன கல்வியால் பட்டம் பெறும் இளைஞர்கள் பொருளாதார வாழ்வோடு போட்டியிடுகையில் சமூகம் பற்றின அக்கறை கொள்ள அவரகளுக்கு அவகாசமில்லை. எது வாழக்கை என்பது புரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.. இங்கேதான் பலவிதமான சமூக குற்றங்கள் பெருகியது.
                           3.
அண்மைகாலங்களில் படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வது என்பது கௌரவ குறைச்சல், படிப்பில் இயலாமை என்பன போன்ற மாய தோற்றங்களை சமூகம் உருவாக்கியுள்ளது. அனைவருக்கும் கல்வியென அரசாங்கம் முழங்குகிறது, கல்வியறிவு கொண்டவன் விவசாயம் செய்தால் இழிவு என சமூகம் உரைக்கிறது. கல்வியறிவற்ற, இளைஞர்கள் இல்லாத விவசாயம் எப்படி வளர்ச்சியடைய முடியும்.?
விவசாயிகளின் கல்லாமை.
                          
இந்திய விவசாயம் வீழ்ச்சியடைந்ததிற்கு இன்னமொரு காரணம் கல்லாமை. எந்த உழவனும் விடிந்ததும் செய்தித்தாள் படித்துவிட்டு உழவுக்கு செல்வதில்லை, இரவு தொலைக்காட்சி செய்தி கேட்டுவிட்டு உறங்குவதில்லை. இதற்கு விதிவிலக்காய் சிலர் இருக்கலாம் ஆனால் விடிந்ததும் ஆங்கில செய்தித்தாள் படித்துவிட்டு, இரவில் உலகசெய்தி பார்த்துவிட்டு உறங்கும் கற்றவன் விவசாயம் பற்றி நினைப்பதேயில்லை. இன்றும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் 90சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். வெறுமனே எழுத்து கூட்டி படிக்க தெரிந்தவன் கல்வியறிவு பெற்றவன் அல்ல, சரளமாக படிக்க தெரிந்தவன் சிந்தனையாளனும் அல்ல. ஆராய்ந்து அறியும் அறிவு வேண்டும். அரசியல் பொருளாதாரத்தில் இந்தியாவை தாண்டிய உலக அறிவு வேண்டும். அரசியல், பொருளாதாரம், அறிவியல் தெரிந்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும். விவசாயத்தின் மீது புதிய அணுகுமுறையை கொண்டுவர வேண்டும்.
தற்காலிக பாதிப்பு.
                          
மேலே சொன்ன சமூக, அரசியல், பொருளாதார பாதிப்புகளை தாண்டி இன்றைய விவசாயம் சுற்றுசூழல் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறது. சுற்றுசூழல் மாறுபாட்டால் குறைந்துவிட்ட மழையின் அளவு, பருவ மாற்றம், வற்றிப்போன நிலத்தடிநீர், மாசுபட்ட காற்று, குறைந்துபோன மண்வளம் இவற்றையெல்லாம் தாண்டி தறகாலிக பிரச்சனையாக விளைவித்த பொருட்களுக்கு கிடைக்காத சரியான விலை, இடைத்தரகர்களின் சுரண்டல், ஆள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலையுயர்வு என்று பல சிக்கலை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.
                          
பன்னாட்டு தொழிற்சாலைகளின் வரவு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற வணிக போக்கால் வளமான விவசாய நிலங்கள் அபகரிக்கபட்டு வருகின்றன.அழிந்துவரும் விவசாயத்தை காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதை கற்ற எல்லோரும் உணர்ந்து கொள்வோம். செயல்படுவோம்.
இயற்கை வேளாண்மை.
                          
நாட்டின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதற்காக அண்டை நாட்டை சார்ந்திருக்கும் எந்தவொரு நாடும் முன்னேரவே முடியாது.. இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், பல பொருளாதார பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை, உணவு பற்றாக்குறை, வறுமை போன்றவற்றிக்கு சிறந்த தீர்வு விவசாயத்தை வளப்படுத்துதல்.
                          
விவசாயத்தை வளப்படுத்த சிறந்த தீர்வு பாரம்பரிய வேளாண்முறை- இயற்கை விவசாயம். இரசாயம், வேதிப்பொருளற்ற இயற்கை முறை விவசாயத்தின் தேவையை பற்றி நிறைய அறிந்திருப்போம்.
இதன் முக்கிய அம்சம்
                           1.
மக்கள் உண்ணும் உணவு அரோக்கிமானதாக இருக்கும். 2. சுற்றுச்சூழல் மாசபடாமல் இருக்கும். 3. விவசாயி வேளாண் உற்பத்தி முறையில் தற்சார்பு அடைவான்.
இயற்கை சார்ந்த விவசாய முறை என்பது உலகளவில் எல்ல நாடுகளிலும் கடைபிடிக்கபடடு வரும் முறை தான். நமது நாட்டிலும் நம் தமிழகத்திலும் சில தன்னார்வ அமைப்புகள் இதை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. வெகுசில விவசாயிகள் அதை செயல்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இயற்கை வேளாண்மை பற்றின கட்டுரைகள் வெறும் கட்டுரைகளாகவே இருக்கின்றன. நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், வெறும் எழுத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வையோ மாற்றத்தையோ ஏற்படுத்திவிடாது. விவசாயிகள் கல்லாதவர்கள். முன்னோர்கள் செய்த அதே தவறை(அவர்களுக்கு விளங்காது என விட்டுவிடுவது) நாமும் செய்ய வேண்டாம். இளைஞர்கள் ஒன்றுகூடுவோம் செயல்படுவோம். கண்டறிந்ததையும், கற்றரிந்ததையும் பாமர மக்களுக்கு சொல்லிக் கொடுப்போம். விழிப்புணர்வை அவர்களது கழனிக்கு எடுத்து செல்வோம். சிதறி கிடக்கும் தீப்பொரிகளை இணைத்து ஒரு தீப்பந்தம் செய்வோம்.
இளைஞர்களின் பங்கு
                          
இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் இருக்கிறது என்கிறார் டாக்டர்..பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் ஈடுபட்டுவரும் விவசாயத்துறை நாட்டின் வளர்சிக்கு பங்கிடவில்லையா? பின்னே விவசாயத்துறையை வளர்ச்சியடைய செய்ய கற்றவர்களும், இளைஞர்களும் வேண்டாமா?.
                          
இந்தியா விவசாய நாடு. ஒவ்வொரு இந்தியனும்-இளைஞனும் விவசாயம் பற்றிய அடிப்படைகளை அறிந்திருக்கவேண்டும். அவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் விவசாயம் தான் உணவளிக்கிறது. விவசாயம் வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையல்ல. அது இந்தியர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனையும் கூட, எனவே ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். பள்ளிகூடங்களில் விவசாயத்திற்கென்றே தனியொரு பாடம் வைத்தால் சிறப்பாக இருக்கும்.
                          
எல்லா இளைஞர்களையும் விவசாயம் செய்ய வருமாறு அழைக்கவில்லை. ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடட்டும், மற்றவர்கள் அறியாத விவசாயிக்கு கற்றுகொடுப்போம். வழிகாடடுவோம், நமது ஓய்வு நேரங்களை இதற்காக செலவழிப்போம். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் தயவு செய்து அதைவிட்டு வெளியேற நினைக்க வேண்டாம், அதை வளப்படுத்த முயற்சியுங்கள். இன்றைய நிலையில் விவசாயம் செய்வதே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்பதை உணர்ந்துகொள்வோம்.

தேவை ஓர் புரட்சி.
                          
தோல்வியடைந்த தொழிலாய் விவசாயிகளாலேயே கருதப்படும் விவசாயத்தை செழிப்படைய செய்யவும் மாசுபட்டுபோன விவசாயத்தை துய்மை செய்யவும் கண்டறியப்பட்டுள்ள ஒரு தீர்வு இயற்கை விவசாயம். அந்த இயற்கை வேளாண்முறைக்கு விவசாயிகளை திருப்ப நமக்கு தேவை ஓர் புரட்சி.
இப்பெரும் முயற்சியை ஒரு தனிமனிதாக செய்ய இயலாது, வெற்றிகரமான விவசாய முறைறை ஒரு இளைஞனால் வகுக்க முடியாது. ஒருங்கினைந்த முயற்சி வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஊடகங்கள் உதவ முன்வரவேண்டும். அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஒன்றுகூடி நல்ல திட்டத்தை வடிவமைக்க வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டால் நிச்சயம் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும். விவசாயத்தில் நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடைய முடியும்.
என் மகன் இன்ஜினியர் ஆக வேண்டும், என் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று மட்டும் இருக்காமல் என் மகன் விவசாயி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பும் நாள் வரவேண்டும்.

ஒன்றுபடுவோம்... திட்டமிடுவோம்.. செயல்படுவோம்..

அக்கறையுடன்,
சாமிநாதன்.      
  நன்றி  தினமணி